திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2018/2019ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஜந்து கலைஞர்கள் விருதுகள் வழங்கிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
2018/2019ம் ஆண்டிற்கு விருதுகள் வழங்க திருச்சி மாவட்ட கலெக்டர் தலைவர் சிவராசு தலைமையில் 19.08.2021 அன்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் விருது தேர்வுக் குழுவினர் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களாக வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் விருதுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
2018/2019ம் ஆண்டு கலை இளமணி விருது, பரதநாட்டியம் கலைப்பிரிவில், பொ.அபிநயா,கலை வளர்மணி விருது முகர்சிங் கலைப்பிரிவில் சி.சௌந்தர்ய லஷ்மி, கலைச் சுடர்மணி விருது சிலம்பம் கலைப்பிரிவில் வீ.தங்கராஜ், கலை நன்மணி விருது கிராமிய நடனம் கலைப்பிரிவில் சுகு.சத்யன், கலை முதுமணி விருது தவில் கலைப்பிரிவில் வி.ஜி.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழவில் திருச்சி மாவட்ட கலெக்டரால் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.