நியாய விலைக்கடைப் பணியாளருக்கான புத்தாக்கப் பயிற்சி; கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்

0 373
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில், பொது விநியோகத் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக நியாய விலைக்கடைப் பணியாளருக்கான புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினை பணியாளர்களுக்கு வழங்கிப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- திருச்சி மாவட்டம் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகளில் தமிழ்நாட்டில் முதன்மையான இடத்தில் உள்ளது. இதற்காக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பாராட்டுகிறேன். திருச்சி மாவட்டத்தில் 7,88,052 குடும்ப அட்டைகளுடன் 879 முழுநேரக் கடைகளும், 321 பகுதிநேரக் கடைகளும், பச்சைமலைப்பகுதியில் 2 நகரும் நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1202 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும, இதரப்பகுதிகளில் 107 நகரும் நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 962 நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் தங்களது பணியில் மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. நியாயவிலைக் கடையை சுத்தமாகப் பராமரிப்பது. சிறப்பாகப் பணிபுரிதல், POS இயந்திரத்தை எவ்வாறு கையாள்வது குடும்ப அட்டைதாரர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால், ஊரடங்கு அமுலில் இருந்த காலத்தில், பொது போக்குவரத்து இல்லாத சூழ்நிலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதுடன், கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைத் தொகுப்புப் பொருள்கள் வழங்கும் பணியினை நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். விற்பனையாளர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக தியானப் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஏற்படுத்தித் தந்த, இந்த நல்ல வாய்ப்பினை நன்முறையின் பயன்படுத்தி, பணியாளர்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர்கள் பத்மகுமார், சித்ரா, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஹபிபுல்லா, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் மாலா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.