“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு பயிற்சி
திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மகளிர் சுகாதார தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்துப்பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வரால் ஆரம்பிக்கப்பட்ட மகத்தானத் திட்டம் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டமாகும். இத்திட்டத்தினை தமிழக முதல்வர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளியில் ஆரம்பித்து வைத்த, அதே வேளையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியிலும், காணொலிக் காட்சி வாயிலாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தினை மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடாக, இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான இத்திட்ட மகளிர் சுகாதார தன்னார்வலர்களுக்கான பயிற்சியானது முதல்கட்டமாக வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டத்திற்கான தன்னார்வலர்களுக்கு செயலாக்கப் பயிற்சி, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அந்தந்த வட்டார மருத்துவ அலுவர்களால் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை தன்னார்வலர்கள் பெற்று, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பயனடையச் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக குழந்தைகளுக்காக நடைபெற்ற இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாமில், தொடர் சிகிச்சை தேவை என கண்டறியப்பட்ட 8 குழந்தைகளை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.ஏ.சுப்ரமணி, நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.