திருச்சியில் சோதனையின் போது கடையில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் திருச்சி பெரியகடைவீதி பகுதியில் உள்ள நடு குஜிலி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிரேம் ஸ்டோர்ஸ் என்ற கடையில் தமிழக அரசால், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் உள்ளதா? என அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ஒரு சாக்கு பையில் கட்டுக்கட்டாக ரூ.10 லட்சத்து 41 ஆயிரம் இருந்தது கண்டு பிடித்தனர். இதுகுறித்து கேட்டபோது, சரியான முறையில் கணக்கு காட்டாததால் கடையில் இருந்த மகேந்திரகான், மகேந்திரகுமார், இக்பால்கான், அன்சாரி, வீரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையிலிருந்து கைப்பற்றிய பணத்தை திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த பணத்திற்கான சரியான கணக்கை கடை உரிமையாளர் காட்டினால் அந்த பணத்தை திரும்ப அவரிடமே கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிய வந்துள்ளதால், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.