திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் 14 வயது மகன் அதே பகுதி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவர் பெயரில் சக 9ம் வகுப்பு மாணவர் ஒருவர், அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடிதத்தை படித்து ஆத்திரமடைந்த மாணவி, பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததை கூறி கடிதத்தை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 9ம் வகுப்பு மாணவரை அழைத்து வகுப்பு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து, சில ஆசிரியர்கள் சேர்ந்து சக மாணவர்கள் முன்னிலையில் மாணவரை அடித்துள்ளனர். இதனால் மன வேதனையடைந்த மாணவர் மாலை வீட்டிற்குச் சென்று எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவர் நேற்று பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். அப்போது பள்ளி செல்லுமாறு பெற்றோர் கண்டித்த நிலையில், தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதை தெரிவித்துள்ளார். பதற்றமடைந்த பெற்றோர் மாணவரை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.