திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு மயூரா பேக்கரி முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 15ந் தேதி சின்ராஜ் (வயது 22) என்பவரை சிலர் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் (வயது 22), ராக்கி என்ற ராகேஷ் (வயது 19), அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் மற்றும் சரத் என்ற சரத்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அலெக்ஸ் மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தற்போது சின்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின், ராக்கி என்ற ராகேஷ் ஆகியோர் மீது மேலும் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதை அவர் ஏற்று, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓயாமரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பாக்கியராஜ் (வயது 39)என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் (வயது 23) என்பவர் அவரை வழிமறித்து, இரும்புக் கம்பியை காண்பித்து ரூ.200 வழிப்பறி செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
கைதான மணிகண்டன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் தொடர் குற்றம் செய்யக்கூடியவர் என்பதால் அவரை ஓராண்டு ஜாமீனில் வெளி வராத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோட்டை குற்றப்பிரிவு போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தனர். அவர் அதை ஏற்று மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.