108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன. மேலும் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்று செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இத்திருக்கோவிலுக்கு வருகை தரும் சேவாரத்திகளின் வசதிக்காகவும், விரைவாக தரிசனம் மேற்கொள்வதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், இத்திருக்கோவிலின் பெரிய சன்னதியில் தற்போது நடைமுறையிலுள்ள விரைவு வழி கட்டணச்சீட்டு ரூ.250 மற்றும் சிறப்பு வழி கட்டணச்சீட்டு ரூ.50 ஆகிய இரு கட்டணச் சீட்டுகளை ரத்து செய்து மாற்றாக ரூ.100 மதிப்புள்ள ஓரே கட்டணச்சீட்டு வருகிற 01.03.2022 முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே, பக்தர்கள் மேற்கூறியவாறு கட்டணச்சீட்டு வழக்கத்தினைப் பயன்படுத்திக் கொண்டு அருள்மிகு நம்பெருமாள் திருவருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்வசதி படைத்தவர்கள் ரூ.250 கொடுத்து தரிசனம் செய்து வந்தனர். ஏழைகள் ரூ.50 கொடுத்து தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த கட்டமுறை என்பது வசதி படைத்தவர்களுக்கு சாதகமாக உள்ளது. தற்போது ஏழைகள் ரூ.50 கொடுத்து ரங்கநாதரை தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது அதனை கோவில் நிர்வாகம் ரூ.100 ஆக உயர்த்தியது அவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரே குடும்பதை சேர்ந்த 5 பேர் அல்லது 10 பேர் வரும்போது அவர்கள் ரூ.250 முதல் 500 வரை கட்டணம் செலுத்தி வந்த நிலையில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் செலுத்தி ரசீது வாங்கி ரங்கநாதரை தரிசனம் செய்யும் நிலை தற்போது உருவாகி உள்ளது.
இதுகுறித்து ஏழை பக்தர்கள் கூறுகையில், கடவுளை பார்ப்பதற்கு கூட பணம் செலுத்த வேண்டி உள்ளது. அன்றாட கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் ரங்கநாதரை கூட்ட நெரிசலில் நின்று தரிசனம் செய்ய முடியாமல் நுழைவு சீட்டு வாங்கி சற்று முன்னதாக சென்று தரிசனம் செய்து வந்தேம். தற்போது அதனை ரூ.100 ஆக மாற்றியது எங்களுக்கு வேதனையாக உள்ளது. இந்த முறை என்பது பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு பாதகமாகவும் உள்ளது. இதனை கோவில் நிர்வாகிகள் பரிசீலனை செய்து ரூ.100 ஆக நிர்ணயித்துள்ள கட்டணத்தை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.