பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் பெண் பலி
திருச்சி, பிப். 8 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் பெண் பக்தர் உயிரிழந்தார். மேலும் 3 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த ஒன்றாம் தேதி பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்கள் நேற்று இரவு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள முள்ளிப்பாடியில் தங்கிவிட்டு இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். வையம்பட்டி அருகே உள்ள தனியார் சாலையோர உணவகம் அருகே பக்தர்கள் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்போது பின்னால் வந்த தனியார் ஸ்பின்னிங் மில்லுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கூட்டத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் உமாராணி (45) என்ற பெண் பக்தர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் சிவகாமி, மாதேஸ்வரி, மூக்காயி ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். தகவலறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பெண்ணின் உடலையும், காயமடைந்த பக்தர்களையும் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.